சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

12.150   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்

-
சீர்மன்னு செல்வக் குடிமல்கு
சிறப்பின் ஓங்கும்
கார்மன்னு சென்னிக் கதிர்மாமணி
மாட வைப்பு
நார்மன்னு சிந்தைப் பலநற்றுறை
மாந்தர் போற்றும்
பார்மன்னு தொன்மைப் புகழ்பூண்டது
பாண்டி நாடு.

[ 1]


சீர் விளங்கும் செல்வக் குடிகள் விளங்கும் சிறப்பில் ஓங்கியதும், மேகங்கள் தங்கும் உச்சியையும் உயர்ந்த ஒளியை யுடைய மணிமாடங்களால் சிறந்து விளங்குவதும், அன்பு பொருந்திய சிந்தையுடையவரும் பல நல்ல அறிவுத் துறைகளில் துறைபோய புலமை சான்றவர்களும் ஆய மாந்தர்கள் வாழ்வதும், பலரும் போற்றும் பெரும் புகழைப் பண்டு தொட்டே பெற்றுச் சிறந்திருப்பதும் பாண்டிநாடாகும். *** தொன்மையாய புகழ் - 'பாண்டி நாடே பழம்பதி யாகவும்'(தி. 8 ப. 2 வரி 118) என்றருளிய புகழ்.
சாயுந் தளிர்வல்லி மருங்குல்
நெடுந்த டங்கண்
வேயும் படுதோளியர் பண்படும்
இன்சொற் செய்ய
வாயும் படும்நீள்கரை மண்பொரும்
தண்பொ ருந்தம்
பாயுங் கடலும்படும் நீர்மை
பணித்த முத்தம்.

[ 2]


அன்பின் தன்மை வாய்ந்த முத்தம், தளிர்களை யுடைய சாயும் கொடிபோலும் சிற்றிடையையும், நெடிய பெரிய கண் களையும், மூங்கிலின் வனப்புடைய மிருதுவாய தோள்களையும் உடைய பெண்களின் பண்ணின் இசை கொண்ட மெல்லிய இன் சொற்களையுடைய வாயினிடத்தும் பொருந்துவன. அதுவன்றி, நீண்ட கரையில் உள்ள மண்ணுடன் பொருது புரளும் அலைகளை யுடைய தாமிரபரணி ஆறு பாயும் கடலினிடத்தும் உண்டாகின்றன.
குறிப்புரை: தண் பொருந்தம் - தண்பொருநை என்கிற தாமிரபரணி ஆறு. நீர்மை பணித்த முத்தம் - பெண்களுக்கு ஆகும் பொழுது அன்பின் நீர்மை கொண்ட முத்தங்கள் எனப் பொருள்படும். கடலுக்கு ஆகும் பொழுது நீரோட்டம் உடைய குளிர்ந்த முத்துக்கள் எனப் பொருள் படும். மக்களின் இன்ப வளமும் பொருள் வளமும் குறித்தவாறு.

மொய்வைத்த வண்டின் செறிசூழல்
முரன்ற சந்தின்
மைவைத்த சோலை மலையந்தர
வந்த மந்த
மெய்வைத்த காலும் தரும்ஞாலம்
அளந்த மேன்மைத்
தெய்வத்தமி ழுந்தருஞ் செவ்வி
மணஞ்செய் ஈரம்.

[ 3]


நறுமணம் பொருந்திய குளிர்ச்சியை, நெருங்கிய வண்டினங்கள் திரண்டு தங்கி இரைகின்ற சந்தன மரங்கள் அடர்ந்த கருமை படர்ந்த சோலைகளையுடைய பொதியமலை தர வந்த மென்மை யாக வீசுகின்ற தென்றற் காற்றும் தரும்; நன்மணத்தை விளைவித்தற் குரிய அன்பினை இந்நிலவுலகை அளந்த மேன்மையுடைய தெய்வத் தமிழும் தரும்.
குறிப்புரை: செவ்வி மணம் செய் ஈரம் என்பது தென்றற் காற்றுக்கு ஆங்கால், நறுமணம் பொருந்திய குளிர்ச்சி எனும் பொருள்படும். தமிழுக்கு ஆங்கால் நன்மணத்தை விளைவித்ததற்குரிய அன்பு எனப் பொருள்படும். தென்றற் காற்றால் உடலும், தமிழால் உணர்வும் தழைக்குமாறு பெறுதும். புறத்தும், அகத்தும் பொருந்தி நிற்கும் சூழல் குறித்தவாறாம். நன்மணம் - நன்கு கலத்தல்: அன்பின் வழியது உயிர் நிலை யாதலின், ஒருவர், ஒருவரோடு நன்கு மனம் பொருந்தி வாழ் தற்கு அன்பே கருவியாகும். அகவாழ்விற்கு இது பெருங் கருவியாதல் போல, இறையுணர்விற்கும் இதுவே பெருங்கருவியாகும். இதனைப் பெரிதும் விளைவிப்பதும் தமிழேயாகும். ஆதலின் 'தெய்வத் தமிழும் தரும் செவ்வி மணம் செய் ஈரம்' என்றார்.

சூழுமிதழ்ப் பங்கய மாகஅத்
தோட்டின் மேலாள்
தாழ்வின்றி யென்றுந் தனிவாழ்வதத்
தையல் ஒப்பார்
யாழின் மொழியிற் குழலின்னிசை
யுஞ்சு ரும்பும்
வாழும் நகரம் மதுராபுரி
என்ப தாகும்.

[ 4]


இத்தகைய பெருமை வாய்ந்த பாண்டிநாட்டில் இதழ்கள் சூழ்ந்த தாமரை மலர் போல் (அந்நகர் அமைய), அம்மலரில் இடங்கொண்டிருக்கும் திருமகள் போல், அந்நகரில் வாழும் பெண் களது யாழ்போலும் மொழியிலும், கூந்தலிலும், முறையே இசையும் வண்டும் சிறந்து வாழ்கின்ற நகரம் மதுராபுரி என்பதாகும்.

குறிப்புரை: தாமரை மலர்போல மதுரை விளங்க, அத்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போல அங்குள்ள பெண்கள் வாழ்கின்றனர். அவர்கள் பேச்சு யாழினும் இனியது. அவர்கள் கூந்தலில் வண்டுகள் பொருந்தி வாழ்கின்றன. குலசேகர பாண்டியன் சொக்கநாதரின் ஆணைவழி கடம்பவனத்தில் தோன்றியருளிய சிவலிங்கத் திருமேனி யைக் கண்டு, அவ்விடத்தைக் காடு கெடுத்து நாடாக்கித் திருநகரம் கண்டபோது, சிவபெருமான் திருச்சடையில் தரித்த பிறையினிடத்து உள்ள அமுதைத் (மதுவை) தெளித்துத் தூய்மையாக்கிய காரணத் தால் மது எனப் பெயர் பெற்றது என்பர்.
பொன்மயமான சடைமதிக் கலையின் புத்தமு துகுத்தன ரதுபோய்ச்
சின்மயமான தம்மடி யடைந்தார்ச் சிவமய மாக்கிய செயல்போல்
தன்மயமாக்கி யந்நகர் முழுதுஞ் சாந்திசெய் ததுஅது மதுர
நன்மயமான தன்மையான் மதுரா நகரென வுரைத்தனர் நாமம்.
(திருநகரம்கண்ட பட. 42) என வரும் திருவிளையாடற் புராணத்தால் இவ்வரலாறு அறியப்படும். இதனால் இத்திருப்பதி மேற்குறித்த மணங்க ளோடு தெய்வமணமுங் கமழும் இயல்பினது என்பதும் பெறப்படும்.

சால்பாய மும்மைத் தமிழ்தங்கிய
அங்கண் மூதூர்
நூல்பா யிடத்தும் உளநோன்றலை
மேதி பாயப்
பால்பாய் முலைதோய் மதுப்பங்கயம்
பாய எங்கும்
சேல்பாய் தடத்தும் உளசெய்யுள்மிக்
கேறு சங்கம்.

[ 5]


புலவர் பெருமக்களால் பாடப்பெறும் செய்யுள்கள் பலவும் அவ்வப்பொழுது சிறப்பாக அரங்கேற்றம் செய்தற்கு இடனாய சங்கங்கள், சிறந்த பண்பாட்டை விளைவிக்கும் இயல், இசை, நாடக மாய முத்தமிழும் நிலைபெற்ற அழகிய அப் பழமையான திருப்பதி யின்கண் நூல்கள் பயிலப் பெறும் இடங்களிலும் உள்ளன. அங்குள்ள வயல்களில் மிகுந்து தவழ்கின்ற சங்குகள், வலிமையுடைய எருமைகள் பாய, அவற்றின் மடியில் இருந்து பெருகிய பால் தேன் தோய்ந்த தாமரைகளில் பாயச் சேல்மீன்கள் எங்கும் பாய்தற்கு இட மாய குளங்களும் உள்ளன.
குறிப்புரை: 'செய்யுள் மிக்கு ஏறு சங்கம்' - எனும் தொடர் மதுரைக்கு ஆங்கால், செய்யுள்கள் பலவும் ஆராய்தற்கு இடனாய சங்கங்கள் எனப் பொருள்படும். மீன்கள் பாய்கின்ற குளத்திற்கு ஆங்கால், (செய்+உள்+ஏறு+சங்கம்) வயல்களில் பொருந்தி ஏறுகின்ற சங்குகள் எனப் பொருள்படும்.

Go to top
மந்தாநிலம் வந்தசை பந்தரின்
மாட முன்றில்
பந்தாடிய மங்கையர் பங்கயச்
செங்கை தாங்கும்
சந்தார்முலை மேலன தாழ்குழை
வாள்மு கப்பொற்
செந்தாமரை மேலன நித்திலம்
சேர்ந்த கோவை.

[ 6]


முத்துக்கள் சேர்த்துக் கோத்த மாலைகள், இனிய தென்றற் காற்று மெல்லிதாக வந்து அசைகின்ற பூப்பந்தராய்ச் சிறந்த மாடங்களின் முற்றத்தில் பந்தாடிய பெண்களுடைய தாமரை மலர் போன்ற செங்கைகள் தாங்கி அப்பிய சந்தனக் குழம்பு சேர்ந்திருக்கும் முலைகள் மேலும் உள்ளன. அதுவன்றித் தாழ்கின்ற குண்டலங்களின் சிறப்பினுடன் ஒளியுடைய பொன்னின் செந்தாமரை போலும் வனப்புடைய அவர்தம் முகத்தின் மேலும் முத்துப் போன்ற வியர்வைத் துளிகள் உள்ளன.
குறிப்புரை: பெண்கள் மார்பில் முத்து மாலைகளும், அவர் முகத்தில் வியர்வைத் துளிகளும் உள்ளன என்பது கருத்து. நித்திலம் சேர்ந்த கோவை எனும் தொடர் பெண்களின் மார்புக்கு ஆங்கால், முத்துக்கள் சேர்த்துக் கோத்த மாலை என்று பொருள்படும். அவர் முகத்திற்கு ஆங்கால், முத்துப் போன்ற வியர்வைத் துளிகள் என்று பொருள்படும்.

மும்மைப் புவனங்களின் மிக்கதன்
றேஅம் மூதூர்
மெய்ம்மைப் பொருளாந் தமிழ்நூலின்
விளங்கு வாய்மைச்
செம்மைப் பொருளுந் தருவார்திரு
வால வாயில்
எம்மைப் பவந்தீர்ப் பவர்சங்கம்
இருந்த தென்றால்.

[ 7]


அத்தகைய மதுரை மூதூரில், உலகில் மெய்ம்மைப் பொருள் இதுவென்பதை உணர்தற்குரிய தமிழ் நூல்களில் விளங்கும் அழிவற்ற உறுதி பயக்கும் செம்மைப் பொருளைத் தருபவரான இறை வர் எழுந்தருளியிருக்கும் திருவாலவாயில், எம்பிறப்பைத் தீர்ப்பவ ராய அவ்விறைவர் தாமே தலைவராக விளங்கிய தமிழ்ச் சங்கம் இருந்ததென்றால், அந்நகர் மேல் (சொர்க்கம்), நடு (மத்தியம்), அடி (பாதாளம்) யாகிய மூவுலகங்களிலும் சிறந்தது அன்றோ?
குறிப்புரை: மதுரையில் சங்கம் இருந்தமையை இறையனார் களவியல் உரையாலும்,(இறையனார் - சூ. 1 பாயிரம்) 'நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக்கிழி தருமிக் கருளினோன்காண்'(தி. 6 ப. 76 பா. 3) என வரும் திருமுறைத் திருவாக்காலும் அறியலாம். தமிழ் நூல்கள், நிலையுடைப் பொருள், நிலையில் பொருள் ஆகிய இரண்டி னையும் விளக்குதற்குப் பெருந்துணையாய் நிற்றலின் 'மெய்மைப் பொருளாம் தமிழ்' என்றார். இனி அந்நூற்கள் சிறப்பென்னும் செம் பொருளை அடைதற்கும் துணை நிற்றலின் 'தமிழ் நூலின் விளங்கு வாய்மைச் செம்மைப் பொருளும் தருவார்' என்றார். மதுரை ஊர்ப் பெயர். திருஆலவாய் இறைவன் வீற்றிருந்தருளும் திருக்கோயிலின் பெயர்.

அப்பொற் பதிவாழ் வணிகர்குலத்
தான்ற தொன்மைச்
செப்பத் தகுசீர்க் குடிசெய்தவம்
செய்ய வந்தார்
எப்பற் றினையும்அறுத் தேறுகைத்
தேறு வார்தாள்
மெய்ப்பற் றெனப்பற்றி விடாத
விருப்பின் மிக்கார்.

[ 8]


அத்தகைய பொற்புடைய நகரத்தில் வாழும் வணிகர்களது குலத்தில், மிகவும் சிறந்ததென நெடுங்காலமாகச் செப்பத் தகுந்த சீருடைய குடியிலுள்ளோர், செய்த தவத்தின் பயனாகத் தோன்றியவர் ஒருவர். அவர் உலகியல் இன்பமாய எவ்விதப் பற்றி னையும் முற்றும் அறுத்து, ஆனேற்றின்மீது எழுந்தருளியிருக்கும் சிவ பெருமானின் திருவடிகளையே உண்மையான பற்று எனப் பற்றிக் கொண்டு அதனை விடாத விருப்பில் மிகுந்தவர்.
குறிப்புரை: குலம் -பெரும் பிரிவு; குடி - அதனுட் பிரிவு.

நாளும் பெருங்கா தல்நயப்புறும்
வேட்கை யாலே
கேளுந் துணையும் முதற்கேடில்
பதங்க ளெல்லாம்
ஆளும் பெருமான் அடித்தாமரை
அல்ல தில்லார்
மூளும் பெருகன் பெனும்மூர்த்தியார்
மூர்த்தி யார்தாம்.

[ 9]


அவர், நாளும் பெருமான் மீது பெருங்காதல் சிறக்கும் விருப்பாலே, தம் சுற்றமும் துணைவரும் முதலாய கேடில்லாத பொருள்கள் யாவும், தம்மை முழுமையாக ஆட்கொண்டருளிய சிவபெருமானின் திருவடித் தாமரைகளே என்று கருதியவர், வேறொன்றையும் பற்றாகக் கொண்டவரல்லர். அந்நிலையில் அவர் சிவபெருமானிடத்து மூளும் அன்பு என்னும் வடிவினர். அவர்தம் திருப்பெயர் மூர்த்தியார் என்பதாகும்.
குறிப்புரை: அவர் வடிவமும் அன்பின் வடிவு (மூர்த்தி), அவர்தம் திருப்பெயரும் மூர்த்தியார் என்பதாம். மூர்த்தி என வருவனவற்றுள் முன்னையது வடிவையும், பின்னையது பெயரையும் குறித்தன. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

அந்திப் பிறைசெஞ் சடைமேல்அணி
ஆல வாயில்
எந்தைக் கணிசந் தனக்காப்பிடை
என்றும் முட்டா
அந்தச் செயலி னிலைநின்றடி
யாரு வப்பச்
சிந்தைக் கினிதாய திருப்பணி
செய்யும் நாளில்.

[ 10]


மாலையில் மிளிரும் இளம் பிறையின் கீற்றைச் செஞ்சடைமேல் அணிந்து வீற்றிருந்தருளும் பெருமானுக்கு, அழகிய திருமேனி அணியாக விளங்கச் சந்தனக் காப்பை என்றும் தவறாது சாத்தி, அந்த அற்புதமாய தொண்டின் நிலையில் நின்று, நாள்தோறும் அவர் செய்யும் தொண்டினைக் கண்டுஅடியார்கள் உவந்திடத், தம் மனத்திற்கு இனியதாய அத்திருப்பணியைச் செய்து வரும் நாள்களில்.
குறிப்புரை: சந்தனக்காப்பு - சந்தனம் கொண்டு இறைவன் திருமேனி முழுவதும் அணிவது.

Go to top
கானக் கடிசூழ் வடுகக்கரு
நாடர் காவன்
மானப் படைமன்னன் வலிந்து
நிலங்கொள் வானாய்
யானைக் குதிரைக் கருவிப்படை
வீரர் திண்தேர்
சேனைக் கடலும் கொடுதென்றிசை
நோக்கி வந்தான்.

[ 11]


காட்டினையே தனக்குப் பெரும் அரணாகக் கொண்டு,படை திரட்டி வைத்திருந்த பொல்லாங்கு நிறைந்த கர்நாடக மன்னன் ஒருவன், பாண்டி நாட்டினைக் கைப்பற்ற நினைந்தவனாய், அதற்கெனத் தன் யானை, குதிரை, காலாட்படை, வலிமையுடைய தேர்ப்படை ஆகிய கடல் போன்ற பெருஞ் சேனைகளுடன் தென்திசை நோக்கி வந்தான்.
குறிப்புரை: வடுகு - ஒரு மொழி: அது பேசப்படும் நாடு வடுக நாடு ஆகும். கரிய மண்ணாகிய களிமண் பரப்பினையுடையதாதலின் கருநாடு எனப்பெயர் பெற்றது. இங்குக் குறிக்கப்படும் கர்நாடக மன்னன் களப்பிரனாக இருத்தல் வேண்டும் என்றும், இவனை வென்றவன் பாண்டியன் கடுங்கோன் என்றும், இம்மன்னனின் காலம் கி. பி. 575- 600 வரையிலாகும் என்றும் தி. வி. சதாசிவ பண்டாரத்தார் (பாண்டியர் வரலாறு பக்கம் 10,11) கூறுவர். இராசமாணிக்கனாரும் இக்கருத்தை ஏற்பர். கருவிப்படை - போர் செய்தற்குரிய கருவிகளைக் கொண்ட படை.

வந்துற்ற பெரும்படை மண்புதை
யப்ப ரப்பிச்
சந்தப் பொதியில்தமிழ் நாடுடை
மன்னன் வீரம்
சிந்தச் செருவென்று தன்னாணை
செலுத்து மாற்றால்
கந்தப் பொழில்சூழ் மதுராபுரி
காவல் கொண்டான்.

[ 12]


இவ்வாறு வந்துற்ற பெரும்படையை நிலம் தெரியாதவாறு நெருங்க அணியாகப் பரப்பி, சந்தனச் சோலைகள் நிரம்பிய பொதிய மலையையுடைய தமிழ்நாட்டினை ஆண்டுவந்த பாண்டிய அரசனின் வீரம் சிந்திடுமாறு, போரில் அவனை வென்று, பின்னர்ப் பாண்டிய நாட்டில் தனது ஆணையைச் செலுத்தும் வகையில் மணம் நிறைந்த சோலை சூழும் மதுரை மாநகரைத் தான் ஆட்சி கொண்டான்.
குறிப்புரை: சந்தப் பொதியில் - சந்தன மரங்கள் நிறைந்த பொதிய மலை.

வல்லாண் மையின்வண் டமிழ்நாடு
வளம்ப டுத்து
நில்லா நிலையொன்றிய இன்மையின்
நீண்ட மேரு
வில்லான் அடிமைத் திறமேவிய
நீற்றின் சார்பு
செல்லா தருகந்தர் திறத்தினில்
சிந்தை தாழ்ந்தான்.

[ 13]


தன் படையின் வலியால் வண்மை நிறைந்த தமிழ் கொழிக்கும் பாண்டி நாட்டின் வளத்தைப் பெருக்குதலின்றி இவ்வுலகில் நெடிதுவாழ்தலில்லாத நிலைமையைப் பொருந்திய அவ்வன்மையாலே, அவன் நீண்ட மேருமலையை வில்லாக உடைய பெருமானின் அடிமைத் திறம் பொருந்திய திருநீற்றின் சார்பில் தான் ஒழுகிச் சென்றிடாது, சமணர்களது சமயத்தில் தனது சிந்தை தாழ்வுற அதனை மேற்கொண்டான்.
குறிப்புரை: நில்லாநிலை - இவ்வுலகில் நெடிது வாழ்தலில்லாத நிலை. கருநாடக அரசனாய அவனுக்கு நெடிது வாழும் நிலையின்மை யும், உண்மைப் பொருளாய சிவபெருமானிடம் அன்பு கொள்ளு தற்கு நற்சார்பு, நற்சிந்தனை ஆகியன இன்மையும் உளவாகச், சமண சமயத்தைச் சார்ந்தனன்.

தாழுஞ் சமண்கையர் தவத்தைமெய்
யென்று சார்ந்து
வீழுங் கொடியோன் அதுவன்றியும்
வெய்ய முன்னைச்
சூழும் வினையால் அரவஞ்சுடர்த்
திங்க ளோடும்
வாழுஞ் சடையா னடியாரையும்
வன்மை செய்வான்.

[ 14]


கீழ்நிலையில் செல்லும் சமணர்களாய வஞ்சகரது தவத்தினை மெய் என்று கருதி, அச்சமயத்தில் வீழும் அந்தக் கொடி யோன், தான் கெட்டது மன்றியும், கொடிதாய ஊழ்வினை வயத்தால் பாம்பும், ஒளி பொருந்திய இளம்பிறையும் உடன் வாழும் சடையை யுடைய சிவபெருமானின் அடியாரையும் வன்செயல்களால் கொடுமை செய்வானாய்,
குறிப்புரை:

செக்கர்ச் சடையார் விடையார்திரு
வால வாயுள்
முக்கட் பரனார் திருத்தொண்டரை
மூர்த்தி யாரை
மைக்கற் புரைநெஞ் சுடைவஞ்சகன்
வெஞ்ச மண்பேர்
எக்கர்க் குடனாக இகழ்ந்தன
செய்ய எண்ணி.

[ 15]


செவ்வானம் போன்ற செஞ்சடையையுடைய வரும், ஆனேற்றை ஊர்தியாகக் கொண்டு ஆலவாயில் அமர்ந் தருளியிருப்பவருமாய முக்கட் செல்வருக்கு அடிமை பூண்ட திருத் தொண்டராம் மூர்த்தியாருக்கு, கறுத்த கல்லை ஒத்த நெஞ்சுடைய வஞ்சகனான கருநாடக அரசன், கொடிய சமணராம் ஈனர்கட்கு உடந்தையாக, அவர்கள் மகிழ்ந்திடுமாற்றால், தனது ஆணையின் வலியால் இகழ்ச்சியான பல செயல்களைச் செய்திட நினைந்து,
குறிப்புரை: மை கல் புரை - கரிய பெருங்கல்லை ஒத்த. எக்கர் - ஈனர்.

Go to top
அந்தம் இலவாம் மிறைசெய்யவும்
அன்ப னார்தாம்
முந்தைம் முறைமைப் பணிமுட்டலர்
செய்து வந்தார்
தந்தம் பெருமைக் களவாகிய
சார்பில் நிற்கும்
எந்தம் பெருமக் களையாவர்
தடுக்க வல்லார்.

[ 16]


அதனால் முடிவிலாத பல இழிந்த செயல்களைச் செய்யவும், மூர்த்தியார் தாம், முன்னர்த் தொண்டு புரிந்து வந்த அம்முறையான தம் பணிகளைத் தளர்ச்சியின்றிச் செய்து வந்தார். தாந்தாமும், தத்தம் பெருமைக்கு உற்ற அளவில் தம் பணிகளைத் தலையான செயல்களாகக் கொண்டு செய்துவரும் எந்தம் பெரு மக்களை, அவர்களின் கடமைகளைச் செய்ய விடாது, யார்தாம் தடுத்து விடமுடியும்? ஒருவராலும் தடுக்க இயலாது.
குறிப்புரை: அறிவிலும் உறுதிப் பாட்டிலும் குறையுடையவன் யாதா னும் ஒரு பணியை மேற்கொண்டு செய்து வரின், அதனைப் பிறர் கூறும் இகழ்ச்சியாலோ, புறங்கூற்றினாலோ அன்றிப் பிற காரணங்களி னாலோ, அவருக்குச் சலிப்பும், தளர்ச்சியும், ஏற்படச் செய்து அப் பணியைத் தடுத்து விடலாம். மாறாக, உறுதிப்பாடும், பேரறிவும், கருமமே கண்ணாகக் கொள்ளும் கடப்பாடும் உடையாரை எவ்வாற் றானும் அவர் செய்யும் பணியினின்றும் தடுத்து விட முடியாது, ஆதலால் 'எந்தம் பெருமக்களை யாவர் தடுக்க வல்லார்?' என்றார். அன்னோரின் பெருமையும், தமக்கு அவர்கள் பால் இருக்கும் ஈடுபாடும் தோன்ற 'எந்தம் பெருமக்கள்' என்றார். இம்மூன்று பாடல் களும் ஒருமுடிபின.

எள்ளுஞ்செயல் வன்மைகள் எல்லையில்
லாத செய்யத்
தள்ளுஞ்செய லில்லவர் சந்தனக்
காப்புத் தேடிக்
கொள்ளுந்துறை யும்அடைத் தான்கொடுங்
கோன்மை செய்வான்
தெள்ளும்புனல் வேணியர்க் கன்பரும்
சிந்தை நொந்து.

[ 17]


இகழ்தற்குரிய வன்மையான கொடுஞ் செயல்கள் பலவற்றையும் அரசன் எல்லையின்றிச் செய்து வந்தும், தம் பணியைக் குறைவின்றிச் செய்துவந்த மூர்த்தியார், இறைவற்குச் சந்தனக் காப்பு அணிவித்தற்கு வேண்டும் சந்தனம் பெறுகின்ற வழிகளையும் அவர் பெற முடியாதவாறு கொடுங்கோல் மன்னனாய அவன், தன் ஆணையால் தடை செய்தான். இத்தகைய நிலையைக் கண்டு கங்கையைச் சடையில் சூடிய பெருமானுக்கு அன்பராய மூர்த்தியாரும் மிகவும் மனம் நொந்து,
குறிப்புரை:

புன்மைச் செயல்வல் அமண்குண்டரிற்
போது போக்கும்
வன்மைக் கொடும்பா தகன்மாய்ந்திட
வாய்மை வேத
நன்மைத் திருநீற் றுயர்நன்னெறி
தாங்கு மேன்மைத்
தன்மைப் புவிமன் னரைச்சார்வதென்
றென்று சார்வார்.

[ 18]


கீழான செயல் செய்வதில் வல்லமையுடைய சமணருடன் கூடித், தனது பொழுதினைப் போக்குகின்ற வன்மையான கொடும் பாதகன் மாய்ந்திட, மெய்யான நான்மறைகளில் கூறப்பட்ட நன்மையுடைய திருநீற்றின் நன்னெறியைத் தாங்கும் மேன்மையாய தன்மையுடைய ஆளும் அரசரை இப்பாண்டி நாடு என்று பெறவுள் ளதோ? என்ற எண்ணமுடையராய்,
குறிப்புரை:

காய்வுற்ற செற்றங்கொடு கண்டகன்
காப்ப வுஞ்சென்
றாய்வுற்ற கொட்பிற் பகலெல்லை
அடங்க நாடி
ஏய்வுற்ற நற்சந் தனமெங்கும்
பெறாது சிந்தை
சாய்வுற்றிட வந்தனர் தம்பிரான்
கோயில் தன்னில்.

[ 19]


சுடுதலையுடைய சினங்கொண்ட, கொடிய கரு நாடக அரசன், சந்தனக் கட்டை பெறுதற்கும் இயலாதவாறு செய்யவும், மூர்த்தியார் சென்று, சந்தனக் கட்டை தேடுதலில் அன்றைய பகல் முழு தும் கழிந்தும், எங்கும் பெறமுடியாத நிலையில், தமது மனம் தளர்ந் திடச் சோர்ந்து, தம் பெருமானின் திருக்கோவிலுக்கு வந்தணைந்தார்.
குறிப்புரை: இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

நட்டம்புரி வார்அணி நற்றிரு
மெய்ப்பூச் சின்று
முட்டும்பரி சாயினுந் தேய்க்குங்கை
முட்டா தென்று
வட்டந்திகழ் பாறையின் வைத்து
முழங்கை தேய்த்தார்
கட்டும்புறந் தோல்நரம் பென்பு
கரைந்து தேய.

[ 20]


'அருட் கூத்தியற்றும் பெருமான் அணிதற்குரிய திருமேனிப் பூச்சாகிய சந்தனக் காப்பு அணியும் தொண்டிற்கு, இன்று எனக்குத் தடை நேர்ந்திடினும், கல்லில் தேய்ப்பதற்கு உரிய என் கை தடையின்றி உள்ளது' என்று நினைந்து, வட்டமாகத் திகழ்ந்திருக்கும் சந்தனக் கல்லில் தம் முழங்கையைப் போர்த்த தோல், நரம்பு, எலும்பு எல்லாம் உராய்ந்து கரைந்து தேயுமாறு தேய்த்தார்.
குறிப்புரை:

Go to top
கல்லின்புறந் தேய்த்த முழங்கை
கலுழ்ந்து சோரி
செல்லும்பரப் பெங்கணும் என்பு
திறந்து மூளை
புல்லும்படி கண்டு பொறுத்திலர்
தம்பி ரானார்
அல்லின்கண் எழுந்த துவந்தருள்
செய்த வாக்கு.

[ 21]


சந்தனக் கல்லின்மேல் வைத்துத் தேய்த்த அவர்தம் முழங்கை குருதி பெருகத், தேய்த்துச் செல்லும் இடம் எங்கும் எலும்பு நொறுங்கி அதனுள் இருந்த (மூளையில் இருந்து வரும்) நரம்பும் வெளிப்படக் கண்ட பெருமான், பொறுத்திலர். அப்பெருமானின் திருவருளால், அவ்விரவின்கண் எழுந்தது வான் வழியாக வருவ தொரு வாக்கு,
குறிப்புரை:

அன்பின்துணி வால்இது செய்திடல்
ஐய உன்பால்
வன்புன்கண் விளைத்தவன் கொண்டமண்
எல்லாங் கொண்டு
முன்பின்னல் புகுந்தன முற்றவும்
நீத்துக் காத்துப்
பின்புன்பணி செய்துநம் பேருல
கெய்து கென்ன.


[ 22]


'ஐயனே! அன்பின் துணிவால் இதனைச் செய்யற்க! உனக்குக் கொடிய துன்பத்தைச் செய்வித்த அக்கொடி யோன் வலிந்து கொண்ட நாடு முழுவதையும் நீயே கொண்டு, முன்பு அவனால் இந்நாட்டில் புகுந்த இன்னல் யாவற்றையும் நீக்கி, உயிர்களைச் செப்பமுறக் காத்து, இதுவரை மேற்கொண்டிருந்த பணியையும் செய்து, பின் நமது பேருலகை அடைந்திடுவாய்,' என்று அருள.

குறிப்புரை:

இவ்வண்ணம் எழுந்தது கேட்டெழுந்
தஞ்சி முன்பு
செய்வண்ணம் ஒழிந்திடத் தேய்ந்தபுண்
ஊறு தீர்ந்து
கைவண்ணம் நிரம்பின வாசமெல்
லாங்க லந்து
மொய்வண்ண விளங்கொளி எய்தினர்
மூர்த்தி யார்தாம்.

[ 23]


இவ்வண்ணம் எழுந்த அவ்வானொலியை மூர்த்தியார் கேட்டு, அஞ்சி, முன்செய்த அச்செயலை விடுத்திடலும், அவர் கையில் இருந்த புண்ணின் ஊறுபாடு எல்லாம் தீர்ந்து முன்பு போல் வனப்பும் மணமும் கமழ நிரம்பியது. அது பொழுது மூர்த்தியார் பேரொளி வடிவாக விளங்கினார்
குறிப்புரை: இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

அந்நாள்இர வின்கண் அமண்புகல்
சார்ந்து வாழும்
மன்னாகிய போர்வடு கக்கரு
நாடர் மன்னன்
தன்னாளும் முடிந்தது சங்கரன்
சார்பி லோர்க்கு
மின்னாமென நீடிய மெய்ந்நிலை
யாமை வெல்ல.

[ 24]


சிவபெருமானிடத்துச் சார்ந்து வாழாதவர்க்கு இவ்வுலக வாழ்வு மின்னல் என யாக்கை நிலையாமை அடையும் என்பது விளங்க, அன்றைய நாள் இரவின் கண், சமணரை அடைக்கல மாகச் சார்ந்து வாழ்கின்ற அரசனாகும் கருநாடக மன்னனும், தன் வாழ்நாள் முடிந்து இறந்தான்.
குறிப்புரை: 'மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்'(குறள், 3) என்பது அறநூல் துணிபாதலின், இறைவ னைப் பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்வார்க்கு வாழ்நாள் நீடிக்கும் என்பது பெறுதும்

இவ்வா றுலகத்தின் இறப்ப
உயர்ந்த நல்லோர்
மெய்வா ழுலகத்து விரைந்தணை
வார்க ளேபோல்
அவ்வா றரனார் அடியாரை
அலைத்த தீயோன்
வெவ்வாய் நிரயத் திடைவீழ
விரைந்து வீந்தான்.

[ 25]


மிக உயர்ந்த நல் ஒழுக்கமும், இறையன்பும் உடையார், அழிவிலாத சிவபுரத்திற்கு விரைந்து செல்வாரைப் போல, சிவனடியார்களுக்கு மிகு துன்பத்தை விளைவித்த தீயவனான கரு நாடக மன்னனும், கொடிய நெருப்பின் தன்மை ஒத்த வாயை யுடைய நரகத்திடை வீழ்தற்கு விரைந்து இறந்தான்.
குறிப்புரை: உயர்ந்த சீலமுடைய நல்லோர், அழிவற்ற பேரின்ப உலகினை அடைதற்கு விரைந்து போவது போல, கொடியவனான கருநாடக அரசனும், கீழாய நரக உலகத்துப் போதற்கென விரைவில் இறந்தான்.

Go to top
முழுதும் பழுதே புரிமூர்க்கன்
உலந்த போதின்
எழுதுங் கொடிபோல் பவருட்பட
ஏங்கு சுற்றம்
முழுதும் புலர்வுற் றதுமற்றவன்
அன்ன மாலைப்
பொழுதும் புலர்வுற் றதுசெங்கதிர்
மீது போத.

[ 26]


வாழ்நாள் முழுமையும் தீய செயல்களையே செய்து வந்த மூர்க்கன் இறக்க, எழுதப் பெறும் கொடி போன்ற எழிலுடைய அவன் தேவியர் உட்பட, கவலையால் சுற்றம் முழுதும் வாடலுற்றனர். மற்று அக்கொடியவினைபோன்று மயங்குதற்குரிய இரவும், சிவந்த ஒளியையுடைய கதிரவன் வரக் கழிந்தது.
குறிப்புரை: புலர்வுற்றது என வருவனவற்றுள், முன்னையது வருத்தமுற்றது எனப் பொருள்படும். பின்னையது பொழுது புலர்ந்தது எனப் பொருள்படும்.

அவ்வேளையில் அங்கண் அமைச்சர்கள்
கூடித் தங்கள்
கைவேறுகொள் ஈம வருங்கடன்
காலை முற்றி
வைவேலவன் தன்குல மைந்தரும்
இன்மை யாலே
செய்வேறு வினைத்திறஞ் சிந்தனை
செய்து தேர்வார்.

[ 27]


அது பொழுது, அவ்விடத்து அமைச்சர்கள் கூடித், தங்கள் கடமையாகக் கொண்ட இறுதிக் கடன்களைக் காலையில் செய்து, கூரிய வேலையுடைய அவ்வரசனுக்கு மைந்தர்களும் இல்லாமையால், தாம் செய்கின்ற வேறு செயல் திறன்களை ஆராய்ந்தவர்களாய்.
குறிப்புரை:

தாழுஞ் செயலின் றொருமன்னவன்
தாங்க வேண்டும்
கூழுங் குடியும் முதலாயின
கொள்கைத் தேனும்
சூழும் படைமன் னவன்தோளிணைக்
காவ லின்றி
வாழுந் தகைத்தன் றிந்தவையகம்
என்று சொன்னார்.

[ 28]


உலகில் ஒழுக்கம் கெட்டு, குடிகள் தாழ்வாகிய செயல்களைச் செய்யாதவாறு, அக்குடிகளைக் கண்காணிக்க ஓர் அரசன் வேண்டும். காரணம், விளைவின் பெருக்கமும் குடிகளின் சிறப்பும் முதலாயின சிறந்திருக்கின்ற நாடாயினும் நீதியை நிலைநாட்ட ஒரு பெரும் படையையுடைய அரசனுடைய தோளிணை களின் காவல் இருந்தாலன்றி இவ்வுலகம் நல்வாழ்வு பெறும் தகைமையுடையதன்று என்று சொன்னார்கள்.
குறிப்புரை: 'ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமைவு இல்லாத நாடு' (குறள், 740) எனவரும் திருக்குறளை இப்பாடல் நினைவு கூர வைக்கின்றது. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பன்முறை உயிர்கள் எல்லாம் பாலித்து
ஞாலங் காப்பான்
தன்னெடுங் குடைக்கீழ்த் தத்தம் நெறிகளில்
சரித்து வாழும்
மன்னரை யின்றி வைகும் மண்ணுல
கெண்ணுங் காலை
இன்னுயி ரின்றி வாழும் யாக்கையை
ஒக்கும் என்பார்.

[ 29]


பல்வேறு வகையானும் உயிர்கள் எல்லா வற்றையும் காத்து, இந்நிலவுலகைக் காக்கும் தனது வெண்கொற்றக் குடைக்கீழ் உயிர்களைத் தத்தமக்குரிய நெறிகளுக்கு ஏற்ப வாழச் செய்யும் அரசரையின்றி இருக்கும் இம்மண்ணுலகத்தை நினையின், இனிய உயிர் இன்றி வாழும் உடம்பினை ஒத்திருக்கும் இந்த உலகம் எனக் கருதியவர்களாய்.
குறிப்புரை: 'நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே, மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்னும் புறநானூறு (புறநா. 186). 'செயிரிலா உலகினில் சென்று நின்று வாழ், உயிரெலாம் உறைவதோர் உடம்புமாயினான்' (கம்பரா. பால. -அரசியல்,10)எனக் கம்பர், அரசனை உடம்பாகவும் மக்களை உயிராகவும் கூறுவர். உடல் இயங்குதற்கு, உயிர் காரணமாதல் போல, உயிருண்மை தெரிதற்கும் உடல் காரணமாகின்றது. வீட்டு நிலையில் உயிர் தனித்து நின்று பேரின்பம் அடையினும், கட்டு நிலையில் உயிர், உடல் ஆகியவை இரண்டும் ஒன்று; ஒன்றற்கு இன்றியமையாது வேண்டப் படுவதா யுள்ளன. 'உடம்பொடு உயிரிடையென்ன மற்றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு' (குறள்,1123) எனத் திருவள்ளுவர் கூறுமாற்றானும் இவ்வுண்மை அறியலாம்.

இவ்வகை பலவும் எண்ணி
இங்கினி அரசர் இல்லை
செய்வகை யிதுவே யென்று
தெளிபவர் சிறப்பின் மிக்க
மைவரை யனைய வேழங்
கண்கட்டி விட்டால் மற்றக்
கைவரை கைக்கொண் டார்மண்
காவல்கைக் கொள்வார் என்று.

[ 30]


இவ்வகையாக எண்ணியவர்கள், இனி இங்கு அதற்குரிய அரசரும் இல்லை; ஆதலின் இனிச் செய்திடும் வகை இதுவே என்று தெளிந்தவராய்ச், சிறப்பின் மிக்கதொரு கரியமலை போலும் யானையைக் கண்கட்டிவிட்டால், மற்று அப்பெருந் துதிக்கையையுடைய யானையால், கைக்கொள்ளப் பெற்றவரே, இம் மண்ணுலகக் காவலைச்செய்யும் அரசராவர் என அவ்வமைச்சர்கள் துணிந்து.
குறிப்புரை: பொருட் சிறப்பு அற்ற இவ்விரு பாடல்களும் (995, 996) யாப்பு வகையான் வேறு பட்டும், இவற்றின் பொருள் முறையே 994, 997 ஆகிய பாடல்களாலேயே பெறப்பட்டும் இருத்தலின் இவை இடைச் செருகல்களாக இருக்கலாம் எனக் கருதுவர் சிவக்கவிமணி யார் (பெரிய. பு. உரை).

Go to top
செம்மாண்வினை யர்ச்சனை நூன்முறை
செய்து தோளால்
இம்மாநிலம் ஏந்தஒர் ஏந்தலை
யேந்து கென்று
பெய்ம்மாமுகில் போன்மதம் பாய்பெரு
கோடை நெற்றிக்
கைம்மாவை நறுந்துகில் கொண்டுகண்
கட்டி விட்டார்.

[ 31]


சிறந்த நூல்களில் கூறப்பட்டவாறு போற்றி, மழை பொழியும் கருமேகம் போன்ற வடிவுடையதாய மதம் பொழிகின்ற பெருத்த நெற்றிப் பட்டத்தையணிந்த பெரிய யானையை, வெள்ளிய ஆடை கொண்டு அவ்யானையின் கண்ணைக் கட்டி, 'இம்மாநிலத்தின் அரசாட்சியைத் தம் தோள் வலியால் தாங்குதற்குரிய ஒரு பெரு மகனாரை ஏந்தி வருக' எனக் கூறி விடுத்தார்.
குறிப்புரை: இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

கண்கட்டி விடுங்களி யானைஅக்
காவல் மூதூர்
மண்கொட்புற வீதி மருங்கு
திரிந்து போகித்
திண்பொற்றட மாமதில் சூழ்திரு
வால வாயின்
விண்பிற்பட வோங்கிய கோபுரம்
முன்பு மேவி.

[ 32]


கண்கட்டி விடப்பட்ட மதக் களிப்புடைய அவ் யானையும், காவலுடைய மதுரை மூதூரில், மண் எழப் பல வீதிகளின் பக்கமாகச் சுழன்று வந்து, திண்மையான பொற்புடைய பெரு மதில் சூழ்ந்த திருவாலவாய்க் கோயிலில், வானமும் பிற்பட உயர ஓங்கிய கோபுரத்தின் முன்பு சென்று.
குறிப்புரை:

நீங்கும்இர வின்கண் நிகழ்ந்தது
கண்ட தொண்டர்
ஈங்கெம்பெரு மான்அரு ளாம்எனில்
இந்த வையம்
தாங்குஞ்செயல் பூண்பன்என் றுள்ளம்
தளர்வு நீங்கிப்
பூங்கொன்றை மிலைந்தவர் கோயிற்
புறத்தின் நிற்ப.

[ 33]


கழிந்து போன இரவின் கண் நிகழ்ந்த அற்புதச் செய்தியை அறிந்தவராய மூர்த்தி நாயனார், ஈங்கு எம்பெருமானின் அருள் இதுவென்றால், அப்பெருமானின் அருள் வழியே இவ்வுல கினைத் தாங்கி, அரசாளும் செயலை ஏற்றுக் கொள்வேன் என்று, முன்தாம் கொண்ட உள்ளத் தளர்ச்சி நீங்கப் பெற்று, கொன்றைப் பூவைச் சூடிய சடையையுடைய சிவபெருமானின் திருக்கோயிலின் புறத்து நிற்றலும்.
குறிப்புரை:

வேழத் தரசங்கண் விரைந்து
நடந்து சென்று
வாழ்வுற் றுலகஞ்செய் தவத்தினின்
வள்ள லாரைச்
சூழ்பொற் சுடர்மாமணி மாநிலந்
தோய முன்பு
தாழ்வுற் றெடுத்துப் பிடர்மீது
தரித்த தன்றே.

[ 34]


யானைகளின் அரசாய பட்டத்து யானை, அவ் விடத்திற்கு விரைந்து சென்று, வாழ்வு கொண்ட இவ்வுலகம் செய் திட்ட தவத்தின் பெரும் பேறாகவுள்ள அம்மூர்த்தியாரைத், தனது முகத்தில் சூழ இடப்பெற்ற மணிகள் பதித்த நெற்றிப்பட்டம், இப்பெரு நிலத்தில் தோயுமாறு வணங்கி, தனது துதிக்கையால், அவரை எடுத்துத் தனது பிடரி மீது வைத்துக் கொண்டது.
குறிப்புரை: இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

மாதங்கம் எருத்தினில் வைத்தவர்
தம்மைக் காணா
ஏதங்கெட எண்ணிய திண்மை
அமைச்ச ரெல்லாம்
பாதங்களின் மீது பணிந்தெழுந்
தார்கள் அப்போ
தோதங்கிளர் வேலையை ஒத்தொலி
மிக்க தவ்வூர்.

[ 35]


யானை தனது பிடரி மீதில் வைத்த மூர்த்தி நாயனாரைக் கண்டு, தம் நாட்டில் உற்ற தீங்குகள் கெட நினைந்த அமைச்சர்கள் யாவரும், அவர்தம் திருவடிகளில் பணிந்து எழுந் தார்கள். அது பொழுது அவ்வூர், கடல் பொங்கி ஒலிப்பது போன்று மகிழ்ச்சியால் ஒலி மிக்கது.
குறிப்புரை: மாதங்கம் - யானை.

Go to top
சங்கங்கள் முரன்றன தாரைகள்
பேரி யோடும்
எங்கெங்கும் இயம்பின பல்லியம்
எல்லை யில்ல
அங்கங்கு மலிந்தன வாழ்த்தொலி
அம்பொற் கொம்பின்
பங்கன்அரு ளால்உல காள்பவர்
பாங்கர் எங்கும்.

[ 36]


அழகிய பூங்கொடி போலும் சாயலையுடைய அங்கயற் கண்ணியாரை ஒரு கூற்றில் கொண்ட சோமசுந்தரப் பெரு மானின் பேரருளின் திறத்தால், உலகாள்பவராக ஏற்றுக் கொள்ளப் பெற்ற மூர்த்தியாரைச் சூழ, எங்கும் சங்குகள் ஒலித்தன. தாரைகள் ஊதப் பெற்றன. பெரு முரசுப் பறையுடன் எங்கெங்கும் இயங்கள் பல இயம்பின. வாழ்த்தொலிகள் நாற்புறமுமாக மலிந்தன.
குறிப்புரை:

வெங்கட்களிற் றின்மிசை நின்றும்
இழிச்சி வேரித்
தொங்கற்சுடர் மாலைகள் சூழ்முடி
சூடு சாலை
அங்கட்கொடு புக்கரி யாசனத்
தேற்றி ஒற்றைத்
திங்கட்குடைக் கீழ்உரி மைச்செயல்
சூழ்ந்து செய்வார்.

[ 37]


கொடிய கண்களையுடயை யானை மீதிருந்த மூர்த்தியாரை இறக்கித், தேன்பொழியும் நீண்ட ஒளியையுடைய பூமாலைகள் சூழ்வுறும் முடிசூடும் சாலையினிடத்து அழைத்துச் சென்று, அங்கு அழகிய அரியணையில் அவரை அமரச் செய்து, ஒப்பற்ற சந்திர வட்டக் குடைக் கீழ் இருந்து, அவர் அரசாளற்கு உரிய உரிமைச் செயல்கள் பலவற்றையும் எண்ணிச் செய்வார்களாய்,
குறிப்புரை:

மன்னுந் திசைவேதியில் மங்கல
ஆகு திக்கண்
துன்னுஞ் சுடர்வன்னி வளர்த்துத்
துதைந்த நூல்சூழ்
பொன்னின் கலசங்கள் குடங்கள்
பூரித்த தூநீர்
உன்னும் செயல்மந் திரயோகர்
நிறுத்தி னார்கள்.

[ 38]


அரியணையில் அமர்ந்திருக்கும் மூர்த்தியாருக்கு முன்பு உற்ற, கிழக்குத் திசையில் அமைந்த மங்கலம் நிரம்பிய வேள்வி யில், விளங்கிடும் சுடருடைய தீயை வளர்த்து, நூல் சுற்றிய பொற் கலசங்களிலும், குடங்களிலும் நிரப்பப் பெற்ற தூய நீரை, மந்திரங் களை ஓதும் சிறந்த தேசிகர்கள் நிறுத்தினார்கள்.
குறிப்புரை:

வந்துற்றெழு மங்கல மாந்தர்கள்
தம்மை நோக்கிச்
சிந்தைச்சிவ மேதெளி யுந்திரு
மூர்த்தி யார்தாம்
முந்தைச்செய லாம்அமண் போய்முதற்
சைவ மோங்கில்
இந்தப்புவி தாங்கிஇவ் வின்னர
சாள்வ னென்றார்.

[ 39]


அவண் வந்துற்ற மங்கலச் செயல் புரியும் அம்மக்களை, நோக்கி, சிந்தையில் சிவமே நிலவுகின்ற திருவுடைய அரசர் பெருமானாய மூர்த்தியார், 'இதற்குமுன் இங்கு இருந்த சமணக் கொள்கை மறைந்து, எவற்றிற்கும் முதற் பொருளாய சிவபெருமானை அடைதற்குரிய சைவம் ஓங்குவதாயின், இவ்வுலகை ஏற்றுத் தாங்கி இவ்வினிய அரசினை ஆள்வேன்,' என்றார்.
குறிப்புரை:

அவ்வாறு மொழிந்தது கேட்ட
அமைச்ச ரோடு
மெய்வாழ்தரு நூலறி வின்மிகு
மாந்தர் தாமும்
எவ்வாறருள் செய்தனை மற்றவை
யன்றி யாவர்
செய்வார் பெரியோய் எனச்சேவடி
தாழ்ந்து செப்ப.

[ 40]


அவ்வாறு மூர்த்தியார் மொழிந்தமை கேட்ட அமைச்சர்களுடன், மெய்ம்மையாய நூல்களில் மேம்பட்ட புலமை மிகுந்தோரும் அவரை நோக்கிப் 'பெரியீர்! எவ்வாறு நடந்திட வேண்டும் என நீர் அருள் செய்கின்றீரோ மற்று அதனையே அல்லாது வேறு ஒன்றினை இங்கு யார் செய்வார்கள்?' (எவரும் செய்யார்) என்று மூர்த்தியார் சேவடிகளில் தாழ்ந்து வணங்கிக் கூற.
குறிப்புரை:

Go to top
வையம் முறைசெய் குவனாகில்
வயங்கு நீறே
செய்யும் அபிடே கமுமாக
செழுங்க லன்கள்
ஐயன் அடையா ளமுமாக
அணிந்து தாங்கும்
மொய்புன் சடைமா முடியேமுடி
யாவ தென்றார்.

[ 41]


'இவ்வுலகை யான் அரசு செய்வேன் எனில், பெருமானின் திருமேனியில் விளங்கும் திருநீறே எனக்குச் செய்யும் திருமுழுக்கு (அபிடேகம்) ஆகவும், சிவபெருமானின் அடையாள மாய உருத்திராக்கமாலையே எனக்குச் சிறந்த அணிகலன்கள் ஆகவும், இறைவனின் சிறப்புடைய திருச்சடைமுடியே அணியும் திருவுடைய முடியாகவும், அமையத் தக்கன' என்றார்.
குறிப்புரை: 'மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கு மடியேன்' (தி. 7 ப. 39 பா. 3) எனத் தொகை நூல் கூறிய மும்மையை இவ்விரி நூலின்கண் விளங்கக் காண்கின்றோம்.

என்றிவ்வுரை கேட்டலும் எல்லையில்
கல்வி யோரும்
வன்திண்மதி நூல்வளர் வாய்மை
அமைச்சர் தாமும்
நன்றிங்கருள் தானென நற்றவ
வேந்தர் சிந்தை
ஒன்றும்அர சாள்உரி மைச்செய
லான உய்த்தார்.

[ 42]


என்று கூறிய இவ்வுரையைச் கேட்ட எல்லை யிலாத கல்வி அறிவினை உடையவர்களும், வலிய திண்மையாய மதிநுட்பம் உடையவர்களுமான அமைச்சர்களும், 'அரசே! இங்கு அருளிச் செய்த அருளிப்பாடு நன்றேயாம்' என்று கூறி, நற்றவ வேந்தராம் மூர்த்தியாரின் திருவுளப்படி அவர் அரசாள்வதற்குரிய உரிமைச் செயல்கள் யாவற்றையும் செய்தனர்.
குறிப்புரை:

மாடெங்கும் நெருங்கிய மங்கல
ஓசை மல்கச்
சூடுஞ்சடை மௌலி யணிந்தவர்
தொல்லை ஏனம்
தேடுங்கழ லார்திரு வாலவாய்
சென்று தாழ்ந்து
நீடுங்களிற் றின்மிசை நீள்மறு
கூடு போந்தார்.

[ 43]


எப்பக்கமும் நெருங்கிய மங்கலவோசை பெருகிட, சடையையே முடியாகக் கொண்ட மூர்த்தியார், முற்படப் பன்றி வடிவு கொண்டு திருமாலும் தேடிய திருவடிகளையுடைய பெருமானாரின் திருவாலவாய் சென்று தொழுது வணங்கி, அரசாள்வதற்கு உரிமை கொண்டு, நீண்ட பெரும் பட்டத்து யானை மீது ஏறி, பெருவீதி வழியாக உலாப் போந்தனராகி.
குறிப்புரை:

மின்னும்மணி மாளிகை வாயிலின்
வேழ மீது
தன்னின்றும் இழிந்து தயங்கொளி
மண்ட பத்திற்
பொன்னின்அரி மெல்லணைச் சாமரைக்
காமர் பூங்கால்
மன்னுங்குடை நீழல் இருந்தனர்
வையந் தாங்கி.

[ 44]


மின்னுகின்ற மணிகள் பதித்த மாளிகையின் வாயிலை அடைந்து, யானையினின்று இறங்கி, ஒளி விளங்கும் கொலு மண்டபத்துட் புகுந்து, பொன்னாலாய அரியணையின் மேல், இரு புறமும் வெண்சாமரைகளின் காற்று வீச, இவ்வுலகை ஏற்று, வெண் கொற்றக் குடை நீழலில் அரசு வீற்றிருந்தார் மூர்த்தியார்.
குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

குலவுந்துறை நீதி யமைச்சர்
குறிப்பின் வைகக்
கலகஞ்செய் அமண்செய லாயின
கட்டு நீங்கி
நிலவுந்திரு நீற்று நெறித்துறை
நீடு வாழ
உலகெங்கும் நிரம்பிய சைவம்
உயர்ந்து மன்ன.

[ 45]


விளங்குகின்ற பல நல்ல அறிவியல் துறைகளில் பயின்று விளங்கிய அமைச்சர்கள், தம்குறிப்புணர்ந்து ஒழுக, உலகில் இதுகாறும் கலகம் செய்த சமணரின் செயல்களாகும் கட்டுகள் யாவும் நீங்கிட, உலகில் நிலவிய திருநீற்றின் நெறியாய ஒழுக்கம் சிறந்து வாழ, உலகம் எங்கும் நிரம்பிய சைவம், தமது சீலத்தால் உயர்ந்து விளங்கிட.
குறிப்புரை:

Go to top
நுதலின்கண் விழித்தவர் வாய்மை
நுணங்கு நூலின்
பதமெங்கும் நிறைந்து விளங்கப்
பவங்கள் மாற
உதவுந்திரு நீறுயர் கண்டிகை
கொண்ட வேணி
முதன்மும்மையி னால்உல காண்டனர்
மூர்த்தி யார்தாம்.

[ 46]


நெற்றிக்கண்ணையுடைய பெருமானின் திருவாயினின்றும் மலர்ந்த நான்மறைகளாய நூல்கள் சிறந்து விளங்க, பிறவிப் பிணி நீங்க உதவும் திருநீறு, உயர்ந்த உருத்திராக்க மாலை, முடிகொண்ட சடை ஆகிய மும்மைப் பொருளாலும் மூர்த்தி நாயனார் உலகினை ஆண்டார்.
குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

ஏலங்கமழ் கோதையர் தந்திறம்
என்றும் நீங்குஞ்
சீலங்கொடு வெம்புலன் தெவ்வுடன்
வென்று நீக்கி
ஞாலந்தனி நேமி நடாத்தி
நலங்கொள் ஊழிக்
காலம்உயிர் கட்கிட ரான
கடிந்து காத்து.

[ 47]


நறுமணம் கமழும் மயிர்ச்சாந்தின் மணம் கொண்ட கூந்தலையுடைய பெண்களிடத்துக் கொள்ளும் விருப்பினை என் றுமே நீங்கியவராய், கொடிய ஐம்புல இன்பங்களையும் பகைவர்களை யும் வென்று நீக்கி, இவ்வுலகம் முழுவதையும் தனியாகச் செலுத்தும் ஆணையில் நிறுத்தி, ஊழிக் காலங்களிலும் உயிர்கட்கு வரும் துயரம் இலவாகப் பாதுகாத்து.
குறிப்புரை: 'மூர்த்தியார் அப்பர் நல்ல துறவறம்' எனத் திருத்தொண்டர் புராணம் கூறுதற்கேற்ப, இவர் நல்ல துறவு நெறியில் வாழ்ந்து அரசளித்தவர் என்பது இதனால் போதரும்.

பாதம்பர மன்னவர் சூழ்ந்து
பணிந்து போற்ற
ஏதம்பிணி யாவகை இவ்வுல
காண்டு தொண்டின்
பேதம்புரி யாஅருட் பேரர
சாளப் பெற்று
நாதன்கழற் சேவடி நண்ணினர்
அண்ண லாரே.

[ 48]


தம்முடைய திருவடிகளை வேற்று நாட்டு அரசர் களும் பணிந்து போற்றிட, இவ்வுலகினைத் துயரம் பற்றாத வகையில் நன்னெறியில் ஆண்டு, திருத்தொண்டினின்றும் மாறிலாத வகையில் அருளரசாகவும் இருந்து, பின்னர்த் தலைவரான சிவபெருமானின் சேவடிகளை அடைந்தனர்.
குறிப்புரை:

அகல்பாறையின் வைத்து முழங்கையை
அன்று தேய்த்த
இகலார்களிற் றன்பரை யேத்தி
முருக னாராம்
முகில்சூழ்நறுஞ் சோலையின் மொய்யொளி
மாட வீதிப்
புகலூர்வரும் அந்தணர் தந்திறம்
போற்ற லுற்றாம்.

[ 49]


அகன்ற சந்தனப் பாறையில் வைத்துத் தம் முழங்கையை அன்று தேய்த்தவரும், வலிமையுடைய போர் வீரம் விளங்கும் யானையால் உலகாளுதற்கெனத் தேர்ந்தெடுக்கப் பெற்ற வருமான அன்பர் மூர்த்தியார் திருவடிகளை வணங்கி, மேகங்கள் சூழும் நறுமணமுடைய சோலைகள் சூழ்ந்த மாடங்களைக் கொண்ட வீதிகளையுடைய திருப்புகலூர் என்னும் பதியில் தோன்றிய அந்தணர் பெருமானாம் முருக நாயனாரின் தொண்டினை இனிப் போற்றல் செய்கின்றேன்.
குறிப்புரை:


Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song